இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாக நிலவிவரும் ஒரே கேள்வி, தோனி எப்போது இந்திய அணியில் ரீ என்ட்ரி கொடுப்பார்? என்பதுதான். வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் தோனி மீண்டும் களமிறங்குவார் என்ற ஆரவாரத்தில், தற்போதிலிருந்தே தோனியின் பெயர் இணையத்தை ஒருவழி பார்த்து வருகிறது என்றுதான் கூறவேண்டும்.
இந்நிலையில் அவர், ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறுவாரா? அல்லது அதற்கு முன்னதாக ஓய்வை அறிவிப்பாரா? என்ற கோள்விகளும் புதிராகவே உள்ளன.
இந்நிலையில் இந்திய அணிக்கு முதல்முதலாக உலகக்கோப்பையை பெற்றுத்தந்த முன்னாள் கேப்டன் கபில்தேவ், தோனியைப் பற்றிய தனது கருத்தை தெரிவித்துள்ளார். தோனி பற்றி அவர், தோனியின் ரசிகர்களில் ஒருவராக அவர் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடவேண்டுமென்பது என்னுடைய ஆசை. ஆனால் ஒரு விளையாட்டு வீரராக நான் அணி நிர்வாகத்தை சார்ந்துதான் முடிவெடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், என்னை பொறுத்தவரை அவர் நிறைய போட்டிகளை விளையாட வேண்டும். ஏனெனில் அப்போதுதான் அவரின் திறமைகள் மெருகேறும். இதுநாள் வரை இந்திய அணியில் தேர்வான வீரர்களுக்கு இதுதான் நடைமுறையாக இருந்தது. இதன் காரணமாகவே தோனியை நான் நிறைய போட்டிகளில் விளையாட வேண்டுமென்று கூறுகிறேன் என தெரிவித்தார்.
ஆனால் நேற்றைய தினம் கபில்தேவ் செய்தியாளர்களிடையே பேசிய போது, ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடுவது மகிழ்ச்சியாக இருந்தாலும், எனது பார்வை இளைஞர்கள் மீதுதான் இருக்கிறது என தெரிவித்திருந்தார். தற்போது அதனை மாற்றி தோனியின் ரசிகனாக பேசிய கபில்தேவின் கருத்து, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிக்குப் பின் தோனி எந்தவிதமான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். இதன் காரணமாகவே ரசிகர்களும் தோனியின் வரவை எண்ணி காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க: நியூசிலாந்துக்கு எதிராக நுட்பத்துடன் பேட்டிங் செய்ய வேண்டும் - ரஹானே அறிவுரை