இந்திய கிரிக்கெட் அணியின் நடுவரிசை வீரர் அம்பத்தி ராயுடு, தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதற்கு முக்கியக் காரணம், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள தவான், விஜய் சங்கர் ஆகியோர் காயமடைந்தபோது, காத்திருப்பு பட்டியலில் உள்ள அம்பத்தி ராயுடுவிற்கு வாய்ப்பளிக்கவில்லை. ரிஷப் பண்ட், மயங்க் அகர்வால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டதோடு, நெட்டிசன்கள் அம்பத்தியை கலாய்த்து பதிவிட்டனர். ஆனால், ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் அம்பத்தி ராயுடுவை தங்கள் நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தது.
கடந்த 2004ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான ராயுடு, தேசிய அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராயுடுவிற்கும் ஆந்திர மாநில கிரிக்கெட் சங்கத்திற்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக நீண்டநாட்களாக உள்ளூர் அணிக்காக மட்டுமே ஆடிவந்தார்.
கடந்த 2012ஆம் ஆண்டு முதன்முறையாக இந்திய அணியில் இடம்பிடித்தார். எனினும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 2013ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார்.
அதைத் தொடர்ந்து அவ்வபோது இந்திய அணியில் களமிறங்கிய ராயுடு, வாய்ப்பு கிடைக்கும் சமயங்களில் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி வந்தார். இது தவிர ஐபிஎல் தொடர்களில் மும்பை அணிக்காக விளையாடி வந்த ராயுடுவை, 2018ஆம் ஆண்டு சென்னை அணி வாங்கியது. அந்த சீசனில் சென்னை அணியின் தொடக்க வீரராக களமிறங்கியதோடு, ரன் குவிப்பில் ஈடுபட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சோபிக்கத் தவறிய ராயுடு, உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்கவில்லை. எனினும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அம்பத்தி ராயுடு தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தார். ஆனால் வீரர்கள் காயமடைந்த போதிலும் மாற்று வீரராக அவருக்கு வாய்ப்பு வழங்காத காரணத்தினால், தனது ஓய்வை அறிவித்துள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 50 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கியுள்ள ராயுடு, மூன்று சதங்கள், 10 அரைசதங்கள் உட்பட ஆயிரத்து 694 ரன்களை குவித்துள்ளார்.