உலகக்கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இந்தப் போட்டியின்போது மைதானம் அருகே விமானம் ஒன்று 'பலுசிஸ்தானுக்காக உலகம் கட்டாயம் பேச வேண்டும்' என்ற வாசகங்களோடு பறந்து சென்றது.
மனித உரிமை மீறல்கள் பலுசிஸ்தானில் மோசமாக நடைபெற்று வருவதை வலியுறுத்தும் விதமாக அந்த வாசகம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே இந்த விமானத்தால், மைதானத்தில் போட்டியை பார்த்து வந்த ரசிகர்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், இதுபற்றி ஐசிசி கூறுகையில், அந்த விமானம் அனுமதி இல்லாமல் அப்பகுதியில் பறந்துள்ளது. எனவே இதுதொடர்பாக விமான போக்குவரத்துத் துறை தீவிர விசாரணை மேற்கொள்ளும் எனக் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்தியா - இலங்கை இடையேயான லீக் போட்டியின்போது, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களுடன் விமானம் ஒன்று பறந்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் இதேபோன்றதொரு வாசகங்களுடன் விமானம் பறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.