இந்தியாவில் இம்மாதம் தொடங்க இருந்த ஐபிஎல் தொடர், கரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் வழ்க்கத்தை விட சமூக வலைத்தளங்களில் தீவிரமாக உள்ளனர்.
இந்நிலையில் தனியார் வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற யுவராஜ் சிங், கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் போது, ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்களை பறக்கவிட்ட நினைவுகள் குறித்து மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில், ‘அந்த போட்டியின் போது ஃபிளின்டாஃப் என்னிடம், முறைதவறிய வார்த்தைகளை கூறினார். பதிலுக்கு நானும் சில வார்த்தைகளைக் கூறினேன். இருப்பினும் எனது கோபம் தணியாததால், அடுத்த ஓவரில் ஆறு சிக்சர்களை விளாசினேன். மேலும் நான் அந்த ஆறாவது சிக்சரை அடித்த போது ஃபிளின்டாஃப் என்னைப்பார்த்து சிரித்தார்.
அதனையடுத்து ஸ்டூவர்ட் பிராட்டின் தந்தை கிறிஸ் பிராட் எனது அறைக்கு வந்து என்னிடம், ‘நீங்கள் எனது மகனுடைய கிரிக்கெட் வாழ்க்கையை கிட்டத்திட்ட முடித்து விட்டீர்கள், அதனால் இப்போது நீங்கள் பிராடிற்காக உங்களது கையெழுத்திட்ட சட்டையை பரிசாக வழங்குங்கள்’ என்று என்னிடம் கூறினார்.
நானும் என்னுடைய இந்திய ஜெர்சியை ஸ்டூவர்டிற்காக வழங்க முடிவு செய்தேன். மேலும் அதில், ‘உன்னுடைய ஓவரில் ஐந்து சிக்சர்களை அடித்தபோது தான் யோசித்தேன் இது உனக்கு எவ்வளவு வருத்தத்தை ஏற்படுத்தும் என்று. இங்கிலாந்து கிரிக்கெட்டின் வருங்காலத்திற்கு என்னுடைய வாழ்த்துகள்’ என்று எழுதி அவரிடம் அளித்தேன்.
தற்போது உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஸ்டூவர்ட்டும் ஒருவராக வலம்வருகிறார். அதுவே இந்தியாவில் ஏதேனும் ஒரு பந்துவீச்சாளர் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களை விட்டுக்கொடுத்திருந்தால், அவரால் இந்த அளவிற்கு வந்திருக்க முடிவுமென எனக்கு தோன்றவில்லை’ என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:‘நான் காபியை விரும்புவதில்லை’ - சர்ச்சையை நினைவுகூர்ந்த ஹர்திக் பாண்டியா!