மக்களை ஈர்க்கும் வகையில் கிரிக்கெட்டில் ஒருநாள், டி20 ஆட்டங்களுக்கு உலகக்கோப்பைத் தொடர் நடத்துவதுபோல் டெஸ்ட் போட்டிகளுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டு, தற்போது நடந்துவருகிறது.
2019 ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி, 2021 ஜூன் 10ஆம் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ளது.
இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒன்பது அணிகள் விளையாடிவருகின்றன. அதில் ஒவ்வொரு அணியும் மற்ற ஆறு அணிகளுடன் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றாலே போதுமானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மீதமுள்ள இரண்டு அணிகளுடன் இரண்டு ஆண்டுகளுக்கு டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் வாக்கர் யூனிஸ், ''இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடரை நடத்துவதற்கு ஐசிசி இன்னும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் சாம்பியன்ஷிப் போன்ற தொடர்களில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆட்டம் நடக்காதது, சாம்பியன்ஷிப் தொடர் நடத்துவதற்கே அர்த்தமில்லாத ஒன்று.
கடைசியாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 2007ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் ஆடியது. இரு அரசுகளுக்கு இடையே கடினமான சூழல் இருப்பது நன்றாகத் தெரியும்.
இருந்தும் ஐசிசி முயற்சி செய்ய வேண்டும். நான் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானேன். அதனை எனது வாழ்வில் எப்போதும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது'' என்றார்.
இதையும் படிங்க: 6 ரன்கள் vs கேட்ச் - ரோஹித், மிஸ்பாவால் கப் கைமாறிய கதை...#T20WorldCup2007