ஆசிய அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை டி20 தொடர் பாகிஸ்தானில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பல்வேறு விவகாரங்களில் முரண்பாடுகள் இருந்துவருகின்றன.இந்த சூழலால் இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்காது என கூறப்படுகிறது.
மேலும் இந்தஹ் தொடர் பாகிஸ்தானிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனிடையே, இந்தத் தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் கைவிட்டதாகவும் செய்திகள் வெளிவர தொடங்கின. இந்நிலையில், இந்த செய்திகள் அனைத்தும் வதந்தி என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முதன்மை நிர்வாகி வசிம் கான் கூறினார். இது குறித்து அவர் பேசுகையில்,
"பாகிஸ்தானில் ஆசிய கோப்பை நடைபெற வேண்டும் என்பது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் முடிவாகும். அந்த முடிவை மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கோ அல்லது ஐசிசிக்கோ எந்த அதிகாரமும் கிடையாது. இந்த த்தொடரை நடத்தவதற்கான இரண்டு மைதானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டுவருகிறோம். ஒருவேளை இந்தத் தொடரில் இந்திய அணி பங்கேற்கவில்லை என்றால், பாகிஸ்தான் அணியும் 2021இல் இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்காது" என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்திய அணி 2008இல் பாகிஸ்தானில் நடந்த ஆசிய கோப்பை தொடரில்தான் இறுதியாக பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்குமா பங்கேற்காதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: சோயப் மாலிக்கின் மெர்சல் கம்பேக்... தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான்