இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்கேற்ற முத்தரப்பு மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி இறுதிக்கு முன்னேறும் என்பதால், இந்தப் போட்டி மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக பெத் மூனி 50 ரன்களும், ரேச்சல் ஹெனஸ் 24 ரன்களும் எடுத்ததால் 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து, 132 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பாக சோஃபி, சாரா கிளென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டாப் ஆர்டர் வீராங்கனைகளின் பொறுப்பில்லாத ஆட்டத்தால் 12.5 ஓவர்களில் 70 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் கடைசி நேரத்தில் ப்ரெண்ட் - வின்ஃபீல்ட் இணை சிறிது நேரம் போராடியது. இறுதியாக 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்ததால், ஆஸ்திரேலிய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
முத்தரப்பு மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் மூன்று அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்று 4 புள்ளிகளுடன் இருந்ததால், நெட் ரென் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா - இந்திய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இறுதிப் போட்டி வரும் 12ஆம் தேதி நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐந்தரை ஆண்டுகளுக்கு பின் ரசிகர்கள் முன் மீண்டும் களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர்!