மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தனத்தன்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பையின் இறுதி ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடக்கவுள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டிகளில் செயல்படுவதற்கான நடுவர்கள் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது.
இந்தப் போட்டியில் கள நடுவர்களாக கிம் காட்டன், அஹ்சான் ராசா ஆகியோர் செயல்படவுள்ளனர். நியூசிலாந்தைச் சேர்ந்த 42 வயதாகும் கிம் காட்டன் முதல்முறையாக ஐசிசி இறுதிப்போட்டிக்கு நடுவராகச் செயல்படவுள்ளார். இவர் ஏற்கனவே ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடிய அரையிறுதிப்போட்டிக்கு நடுவராகச் செயல்பட்டிருந்தார்.
மற்றொரு கள நடுவராகப் பாகிஸ்தான் அஹ்சான் ராசா செயல்படவுள்ளார். இவரும் கிம் காட்டனைப் போல் ஐசிசி நடத்தும் இறுதிப்போட்டியில் முதல்முறையாக நடுவராகச் செயல்படவுள்ளார். இவர் ஏற்கனவே 2017ஆம் ஆண்டு நடந்த மகளிர் உலகக்கோப்பைத் தொடரின் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்ற அரையிறுதி ஆட்டத்தில் நடுவராகச் செயல்பட்டிருந்தார்.
தொடர்ந்து மூன்றாவது நடுவராக வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த பிராத்வெய்ட்டும், நான்காவது நடுவராக ஜிம்பாப்வேயின் லாங்டனும் செயல்படவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தப்ப ஒத்துக்குறேன்; கப் கப்பல் ஏறினதுக்கு பிறகு வாயை திறக்கும் அம்பயர்