2020ஆம் ஆண்டுக்கான மகளிர் டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. இன்றோடு லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை மறுநாள் அரையிறுதிப் போட்டிகள் நடக்கவுள்ளன.
முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகளும், இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளும் மோதவுள்ளன. இதனால் சர்வதேச ரசிகர்களிடையே எந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீக் கருத்து தெரிவித்துள்ளார். அதில், '' இதுவரை டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்றதில்லை. ஆனால் இம்முறை ஷஃபாலி வர்மா, பூனம் யாதவ் உள்ளிட்ட வீராங்கனைகளின் சிறப்பான பங்களிப்பால் இறுதிப்போட்டிக்கு முதல்முறையாக தகுதிபெறும்.
எப்போதும் இந்திய அணியில் சிறப்பாக வீராங்கனைகள் இருப்பார்கள். ஆனால் இம்முறை தான் முதல்முறையாக சிறந்த வீராங்கனைகளுடன், அணிக்காக சிறப்பாக பங்களிக்கக் கூடிய வீராங்கனைகளும் இருக்கிறார்கள். சிறந்த வீராங்கனைகள் தடுமாறும் நேரத்தில், மற்ற வீராங்கனைகள் பொறுப்பேற்றுக் கொள்வது இந்திய அணியின் வெற்றியில் முக்கியப் பங்காக உள்ளது.
இந்திய அணியை வீழ்த்த வேண்டுமென்றால் எதிரணியினர் நிச்சயம் சரியான திட்டத்துடன் களமிறங்க வேண்டும். இல்லையென்றால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெறுவதை வேடிக்கை தான் பார்க்கவேண்டும். இந்திய அணியின் இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா நிச்சயம் உயர்ந்த இடத்திற்கு வருவார்.
சர்வதேச பந்துவீச்சாளர்களையும் அச்சமின்றி எதிர்கொள்ளும் அவரது திறம், பிரமிக்க வைக்கிறது. இந்தத் தொடரில் அவர் இன்னும் அரைசதம் அடிக்கவில்லை. அதனை அரையிறுதியில் நிறைவேற்றுவார் என நம்புகிறேன்'' என்றார்.
இதையும் படிங்க: நியூசிலாந்து தொடர்: விராட் கோலியைவிட அதிக ரன்கள் எடுத்த முகமது ஷமி!