உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பையும் நடைபெறுமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இருப்பினும், இதுகுறித்து ஐசிசி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இதுதொடர்பாக நேற்று பேசிய கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் இயர்ல் எட்டிங்ஸ், தற்போது இருக்கும் சூழலில் 16 நாடுகளையும் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவந்து உலகக்கோப்பை தொடர் நடத்துவது என்பது நடைமுறை சாத்தியமற்றது என்றார்.
இதனிடையே வெளியிடப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் இந்தாண்டு சீசனுக்கான அட்டவணையில், உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக, அந்த அணி இந்தியாவுடன் டி20 தொடரில் பங்கேற்கவிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.
இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் ஒருவர் கூறுகையில், “ஒருவேளை டி20 உலகக்கோப்பை ரத்துசெய்யப்பட்டால், அந்த மாதங்களில் (அக்டோபர்) ஐபிஎல் போட்டி நடத்தப்படும். அவ்வாறு நடந்தால் ஆஸ்திரேலியா உடனான டி20 தொடர் அட்டவணையில் மாற்றம் செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.