இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி நாளை மறுநாள்(டிச.17) அடிலெய்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகாக இரு அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலிருந்து இஷாந்த் சர்மா விலகியுள்ளது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய அணியின் துணைக்கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரஹானே, “எங்களிடம் வலிமையான பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ஆனாலும் அணியில் அனுபவமிக்க வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் இல்லை என்பது பெரும் பின்னடைவுதான். இப்போதுள்ள இந்திய அணியில் பும்ரா, முகமது ஷமி ஆகியோருடன் உமேஷ் யாதவ், முகமது சிராஜ், நவ்தீப் சைனி இடம்பிடித்துள்ளனர். அவர்களுக்கு ஆஸ்திரேலிய சூழலில் எவ்வாறு பந்துவீசுவது என்பது தெரியும்.
ஆனால் நாங்கள் முதலில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதால், இவர்களை கொண்டு எங்களால் எதிரணியின் விக்கெட்டுகளை எடுப்பது சற்று கடினம்தான். இருப்பினும் இவர்களின் பந்துவீச்சு திறன் மீது எனக்கு முழு நம்பிக்கையுள்ளது.
மேலும் எங்களது அணியில் யார் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்குவார்கள் என்பது குறித்து நாங்கள் இன்னும் அலோசிக்கவில்லை. நாளை நடைபெறும் பயிற்சிக்கு பின் யாரை தொடக்க வீரர்களாக களமிறக்குவது என்பது குறித்த முடிவுகளை எடுக்கவுள்ளோம். ஏனெனில் எங்கள் அணியில் மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், சுப்மன் கில், ப்ரித்வி ஷா ஆகியோர் உள்ளனர்.
அதேசமயம் விக்கெட் கீப்பராக சஹா அல்லது ரிஷப் பந்த் ஆகியோரில் யாருக்கும் இடம் என்பதையும் நாங்கள் நாளை முடிவு செய்வோம்” என்றார்.
இதையும் படிங்க: பாலன் டி ஓர் ட்ரீம் அணி: மெஸ்ஸி, ரொனால்டோ, மரடோனாவுக்கு இடம்!