இங்கிலாந்து கவுண்டி அணிகள் விளையாடும் டி10 கிரிக்கெட் போட்டித் தொடர் துபாயில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடருக்கு முன்னதாக, நடைபெற்ற போட்டியில் லாங்காஷையர் அணி சர்ரே அணியுடன் மோதியது.
இதில், சர்ரே அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய வில் ஜேக்ஸ், லாங்காஷையர் அணியின் பந்தை மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரிகளாகவும் சிக்சர்களாகவும் விளாசி மிரட்டினார். இதன் பலனாக, 25 பந்துகளில் சதம் விளாசி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இறுதியில் அவர் 30 பந்துகளில் 8 பவுண்டரி, 11 சிக்சர்கள் என 105 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனிடையே, ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில், வில் ஜேக்ஸ் லாங்காஷையர் வீரர் ஸ்டீஃபன் பெரி வீசிய ஆறு பந்துகளையும், சிக்சராக பறக்க விட்டு வானவேடிக்கை நிகழ்த்தினார்.
முதலில் பேட்டிங் ஆடிய சர்ரே அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்களை குவித்தது. இதைத்தொடர்ந்து 178 ரன் இலக்குடன் ஆடிய லாங்காஷையர் அணி, 10 ஓவர்களில் 81 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சர்ரே அணி இந்தப் போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்தப்போட்டி அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் 30 பந்துகளில் சதம் விளாசிய சாதனையை வில் ஜேக்ஸ் முறியடிக்கும் வாய்ப்பு பறிபோனது.