வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
இதில் அந்த அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது 41 வயதாகும் கிறிஸ் கெய்ல், சர்வதேச, உள்ளூர் டி20 போட்டிகளில் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார்.
தற்போதும் அவரது அதிரடியான ஆட்டம் தொடர்ந்து வருவதால், அவருக்கு இந்த வாய்ப்பைத் தந்ததாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கை அணிக்கெதிரான தொடரின் போது எந்த வரிசையிலும் களமிறங்கி விளையாடத் தயார் என கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கெய்ல், "நான் இப்போது மூன்றாம் வரிசையில் ஸ்பெஷலிஸ்ட் என்று தெரிகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நான் மூன்றாம் வரிசையில் களமிறங்கி விளையாடினேன். அதில் எனக்கு எந்த பிரச்னையும் இருந்ததாக தெரியவில்லை.
மேலும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி (பஞ்சாப் கிங்ஸ்) எனது அனுபவத்தை கருத்தில் கொண்டும், கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வாலின் ஃபார்மினாலும் என்னை மூன்றாம் வரிசையில் களமிறக்க முடிவு செய்தது.
ஆனால் அது எனக்கு எந்த வகையில் பிர்சனையாகத் தோன்றவில்லை. மேலும் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நான் சிறப்பாக விளையாடியிருக்கிறேன். அதுமட்டுமின்றி நான் தொடக்க வீரரும் கூட. அதனால் இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரில் என்னை எந்த இடத்தில் களமிறக்கினாலும் நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
தற்போது 41 வயதாகும் கிறிஸ் கெய்ல், 132 டெஸ்ட், 301 ஒருநாள், 58 டி20 போட்டிகளில் விளையாடி 19 ஆயிரத்திற்கு அதிகமான ரன்களையும், 257 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதில் 42 சதங்களும், 107 அரைசதங்களும் அடங்கும்.
அதேபோல் ஐபிஎல் தொடரில் 132 போட்டிகளில் விளையாடியுள்ள கெய்ல், 4772 ரன்களையும், 18 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதில் 6 சதங்களும், 31 அரைசதங்களும் அடங்கும். மேலும், ஐபிஎல் தொடரின் தனி நபர் அதிகபட்சமான 175 ரன்களையும் கிறிஸ் கெய்ல் தன்வசம் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய் ஹசாரே: அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய ஷர்துல்; மும்பை அணி அபார வெற்றி!