ஆப்கானிஸ்தானுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் ஸசாய், ஆஸ்கர் ஆஃப்கான், முகமது நபியின் அரைசதங்களினால் ஸ்கோரை உயர்த்தியது.
இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி ஐம்பது ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆஸ்கர் ஆஃப்கான் 86 ரன்களையும், ஸசாய், நபி ஆகியோர் தலா 50 ரன்களையும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமோ பவுல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சாய் ஹோப் மற்றும் பொல்லார்டின் அதிரடி ஆட்டத்தால் 48.4 ஓவர்களுக்குள்ளாகவே வெற்றி இலக்கை அடைந்தது. அதிரடியாக விளையாடி சாய் ஹோப் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது ஏழாவது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஆப்கானிஸ்தான் அணியை ஒயிட் வாஷ் செய்தது. சிறப்பாக விளையாடிய சாய் ஹோப் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும் ரோஸ்டன் சேஸ் தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து நட்சத்திர வீரர்!