வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தனது முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடி வருகிறது. ஆண்டிகுவாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்பின் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் கே.எல்.ராகுல் ஒருபுறம் நிதானமாக ஆடினாலும் மறுபுறம் களமிறங்கிய மயங்க் அகர்வால், விராட் கோலி, புஜாரா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே, ஜடேஜா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 297 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரஹானே 87 ரன்களும், ஜடேஜா 58 ரன்களும் சேர்த்தனர்.
அதன்பின் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக கிராக் பிராத்வெயிட், ஜான் கேம்பல் ஆகியோர் களமிறங்கினர். இவர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். பிராத்வெயிட் 14 ரன்கள் அடித்திருந்த நிலையில் இஷாந்த் சர்மா வீசியா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் களமிறங்கிய அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தனர்.
இதன் மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 59 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிக பட்சமாக ரோஸ்டன் சேஸ் 48 ரன்களை எடுத்தார். இந்திய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா 13 ஓவர்களில் 42 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இவர் 9-ஆவது முறையாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் 10 ரன்களுடனும், மிகுவல் கம்மின்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கவுள்ளனர்.