டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக திகழ்பவர், ஜேசன் ஹோல்டர். தற்போது இவர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது.
இதில் செளதாம்டானில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றதற்கு இவர் முக்கிய காரணமாக திகழ்ந்தார். முதல் இன்னிங்ஸில் 42 ரன்கள் மட்டும் வழங்கி ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார். டெஸ்ட் போட்டிகளில் இவரது சிறந்த பந்துவீச்சு இதுவாகும்.
இந்நிலையில், ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இவர் மூன்றாம் இடத்திலிருந்து 862 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதன் மூலம் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு அதிக புள்ளிகளை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். முன்னதாக 2000ஆம் ஆண்டில் வால்ஷ் 866 புள்ளிகளை பெற்றிருந்தார்.
அதேசமயம் இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த நியூசிலாந்து பந்துவீச்சாளர் நைல் வாக்னர் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இப்பட்டியலில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பெட் கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் தொடர்ந்து தனது முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டார். இந்திய வீரர்களைப் பொறுத்தவரையில் பும்ரா மட்டும் இப்பட்டியலில் டாப் 10 இடத்தில் உள்ளார். அவர் 779 புள்ளிகளுடன் தொடர்ந்து ஏழாவது இடத்தில் நீடிக்கிறார்.