இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் ஹனுமா விஹாரி, விராட் கோலி, இஷாந்த் சர்மா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. இந்த இன்னிங்ஸில் ஹனுமா விஹாரி 111 ரன்களும், விராட் கோலி 76 ரன்களும், இஷாந்த் சர்மா 57 ரன்களையும் விளாசினர்.
அதன் பின் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 117 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் ஜஸ்ப்ரிட் பும்ரா ஹாட்ரிக் விக்கெட்டுகளுடன் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன் பின் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்ட காரர்களான கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் சொர்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சட்டேஷ்வர் புஜாரா தனது நிதான ஆட்டத்தை தொடர்ந்தார்.
மறுமுனையில் களமிறங்கியா கேப்டன் கோலி சந்தித்த முதல் பந்திலேயே கீமார் ரோச்சிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். அதன் பின் களமிறங்கிய அஜிங்கியா ரஹானே, புஜராவுடன் ஜோடி சேர்ந்து ரன்குவிப்பில் ஈடுபட்டார். 27 ரன்கள் அடித்திருந்த நிலையில் புஜாரா, ஹோல்டரிடம் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன் பின் 5ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரஹேனா, விஹாரி இருவரும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 100 ரன்களை கடந்தது. பின் சிறிது நேரத்தில் அஜிங்கியா ரஹானே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 19ஆவது அரை சதத்தை கடந்தார்.
அவரைத்தொடர்ந்து சிறிது இடைவெளியில் ஹனுமா விஹாரி அரை சதமடித்து அசத்தினார். இருவரும் அரை சதமடித்திருந்த நிலையில் இந்திய அணி 168 ரன்களுக்கு இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. இந்திய அணி சார்பில் அஜிங்கியா ரஹானே 64 ரன்களையும், ஹனுமா விஹாரி 53 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் வேகப்பந்து வீச்சாளர் கீமார் ரோச் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதனைத்தொடர்ந்து 478 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜான் காம்பெல் 16 ரன்களிலும், கிராக் பிராத்வெயிட் 3 ரன்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியில் டேரன் பிராவோ 18 ரன்களுடனும், ஷமர் புரூக்ஸ் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளித்து இன்னும் 423 ரன்களை அடிக்க வேண்டும் என்ற சவாலான இலக்குடன் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.