ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள், மூன்று டி20, ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவின் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில், ஒருநாள் தொடரை பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக எவின் லீவிஸ் 68 ரன்கள் அடித்தார். அதில், நான்கு பவுண்டரி, ஆறு சிக்சர்கள் அடங்கும்.
இதைத்தொடர்ந்து, 165 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. இறுதியில், அந்த அணி 20 ஓவர்களின் முடிவில் 134 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம், ஆப்கானிஸ்தான் அணி தொடர் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கேஸ்ரிக் வில்லியம்ஸ் மூன்று, பொல்லார்ட் இரண்டு, ஹேடேன் வால்ஷ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.