இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் டி20 போட்டி நேற்று மழைக் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், நாளை இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது.
இதனையொட்டி இந்திய கிரிக்கெட் அணி இன்று மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் வந்தது. நாளை நடக்கவுள்ள கிரிக்கெட் போட்டியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு களமிறங்கவுள்ள பும்ரா, தவான் ஆகியோரின் ஆட்டம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே நேற்றையப் போட்டி ரத்து செய்யப்பட்டதாக 09.54 மணிக்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னர், 9 மணிக்கே வீரர்கள் பலரும் விடுதிக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
எனவே, வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறிய பின்னும், நடுவர்கள் 09.45 மணிக்கு கள ஆய்வில் ஈடுபட்டது ஏன் எனக் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அஸ்ஸாம் கிரிக்கெட் சங்க நிர்வாகி தேவஜித் பேசுகையில், ' இது வழக்கமான நடவடிக்கை தான். கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டது தெரிந்தால், ரசிகர்கள் வரம்பு மீறி நடப்பர். அதனைக் கட்டுப்படுத்துவதற்காகவே சில காலம் தாமதித்து ரத்து செய்யப்பட்டது அறிவிக்கப்பட்டது ' என்றார்.
இதையும் படிங்க: 6 பந்துகளில் 5 சிக்சர்: பிக் பாஷில் பறக்கவிட்ட கொல்கத்தாவின் புதிய வரவு