ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து அவருக்கு மாற்று வீரராக தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிமுக வீரர் நடராஜன் தங்கராசுவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலையடுத்து நடராஜனுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்துவருகின்றன.
இந்நிலையில் நடராஜனின் திறனை சர்வதேச அளவில் வெளிக்கொண்டுவந்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய வார்னர், “நடராஜன் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இது அவரது முயற்சிக்கு கிடைத்த பலன். இருப்பினும் அவர் டெஸ்ட் போட்டிகளில் தனது திறனை வெளிப்படுத்துவாரா என்பது குறித்து 100 விழுக்காடு என்னால் உறுதியாக கூற முடியாது.
அவர் கனகச்சிதமாகப் பந்துவீசக்கூடியவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரால் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக அதேபோல் பந்துவீச முடியுமா என்பதுதான் கேள்விக்குறி. ஏனெனில் அவர் முதல்தர டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பந்துவீசியுள்ளார். அது சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் எடுபடுமா என்பது எனக்குத் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பிரிமியர் லீக்: மான்செஸ்டர் யுனைடெட் அணியிடம் வீழ்ந்த ஆஸ்டன் வில்லா!