கரோனா வைரஸ் காரணமாக பிற விளையாட்டு போட்டிகளைப் போலவே கிரிக்கெட் போட்டிகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இப்பெருந்தொற்றால் இந்திய கிரிக்கெட்டின் நடப்பு சீசனுக்கான அட்டவனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி நடைபெற்ற டெஸ்ட் போட்டியில்தான் இந்தியா இறுதியாக விளையாடியது.
அதன்பின், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறவிருந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருந்தது. அதில், தர்மசாலாவில் நடைபெறவிருந்த முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடபட்ட நிலையில், கரோனா வைரஸ் காரணமாக தொடர் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.
அதேசமயம், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், இந்திய அணி சர்வதேச போட்டியில் விளையாடி கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. எனவே, ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருக்கும் இந்திய வீரர்களின் உடற்தகுதியிலும் அவர்களது ஆட்டத்திறனிலும் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இருப்பினும், இந்திய வீரர்கள் தங்களது உடற்தகுதியில் மிகவும் தீவிரமாக உள்ளனர். பெரும்பாலான வீரர்கள் தங்களது வீட்டிலேயே உடற்பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர். குறிப்பாக, கேப்டன் கோலி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான துணை கேப்டன் ரோஹித் சர்மா, ஜடேஜா, ஷிகர் தவான், முகமது ஷமி, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தங்களது வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி மேற்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கியவுடன் வீரர்களுக்கான உடற்பயிற்சி முறைகள் குறித்து பயிற்சியாளர் குழுவைச் சேர்ந்த நிக் வேப் ஒரு யுக்தியை தயார் செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்கு முன், குறைந்தது இந்திய வீரர்கள் ஆறு வாரம் தேசிய அகாடமியில் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சேவாக் சாதனையை முறியடிக்க வேண்டுமென யுவி நினைத்தார்: ரோஹித் ஷர்மா...!