நடப்பு சீசனுக்கான உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், தற்போது நாட்டில் கரோனா சூழல் நிலவுவதால் இந்தத் தொடர்கள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனிடையே மார்ச் மாதத்தில் நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 தொடரும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நடைபெறும் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், உள்ளூர் போட்டிகளை நடத்துவது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் ஆலோசனை கூறியுள்ளார்.
அதில் அவர், "தற்போதைய சூழ்நிலை சரியான பிறகு ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்குத்தான் பிசிசிஐ முன்னுரிமை அளிக்க வேண்டும். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு நடப்பு சீசனுக்கான விஜய் ஹசாரே, துலிப் டிராபி, தியோதர் தொடர்களை ரத்துசெய்துவிட்டு, ரஞ்சி கிரிக்கெட் தொடரையும், சையத் முஷ்டாக் அலி டி20 தொடரையும் முழுவதுமாக நடத்திட பிசிசிஐ கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.