வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராகத் திகழ்ந்தவர் தமிம் இக்பால். வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற 2007 உலகக்கோப்பை தொடரின் குரூப் போட்டியில் வங்கதேச அணி இந்தியாவை வீழ்த்த முக்கியக் காரணமாக இருந்தவர் தமிம் இக்பால்.
இந்நிலையில், இப்போட்டி குறித்து நினைவுகூர்ந்த அவர், "அந்தப் போட்டியில் இந்திய வீரர்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி ஆகியோரது ஆட்டத்தைப் பார்ப்பதைத் தவிர வேறு எதிலும் நான் கவனம் செலுத்தவில்லை. இத்தகைய ஜாம்பவான்களின் முன்னிலையில் நான் பேட்டிங் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இந்திய அணி 190 ரன்களை அடித்ததால் இப்போட்டியில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு அதிகமாக இருந்தது. ஓப்பனிங்கில் ஜாகீர்கானின் பந்துவீச்சை எதிர்கொள்ள தொடக்கத்தில் சற்று கடினமாகத்தான் இருந்தது.
அவர் வீசிய முதல் பந்தில் ரன் அடிக்கவில்லை என்றாலும், அடுத்த பந்தில் பவுண்டரியை விளாசியது எனக்கு உத்வேகத்தை அளித்தது. அந்தப் போட்டியில் வங்கதேச அணிக்கு கிடைத்த வெற்றி, எங்களால் மென்மேலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் மத்தியில் விதைத்தது" எனத் தெரிவித்தார்.