கரோனா வைரஸுக்கு பிறகான உலகம் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அந்த உலகில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். குறிப்பாக, ஒருவருக்கு ஒருவர் சகஜமாக கை குலுக்குவது பெரும்பாலும் தவிர்க்கப்படும். அந்தவகையில், கிரிக்கெட் பந்தை பளபளாக்க வீரர்கள் அதன் மீது எச்சில் அல்லது வியர்வைய தடவுவது வழக்கம். காலங்காலமாக வீரர்கள் பந்தை ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங் செய்து விக்கெட்டுகளை வீழ்த்துவதற்காக அப்படி செய்துவருகின்றனர்.
ஆனால், கரோனாவுக்கு பிறகான உலகத்தில் பந்து மீது எச்சில் தடவுவதும் தவிர்க்கப்படும் என தெரிகிறது. இதனிடையே, இனி கிரிக்கெட் பந்து மீது எச்சில் தடவ ஐசிசி தடை விதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பந்தில் எச்சில் தடவவுதற்கு பதில் வேறு செயற்கையான பொருள்களை பயன்படுத்துவது குறித்து ஐசிசி இம்மாத இறுதிக்குள் முடிவு எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், எச்சில் தடவாமல் கிரிக்கெட் பந்தை எப்படி பந்தை ஸ்விங் செய்வது? அதேசமயம் பந்தை சேதப்படுத்தாமல் எப்படி ஆடுவது குறித்த கேள்விக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே தனித்துவமான பதிலை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "எச்சில், வியர்வை தடவாமலேயே பந்தை நன்கு ஸ்விங் செய்ய நாம் ஏன் அதிக எடைக்கூடிய பந்தை பயன்படுத்தக்கூடாது. பந்தின் ஒரு பக்கம் அதிக எடை இருந்தால் அதை நிச்சயம் பளபளப்பாக்க நாம் எதுவும் செய்ய தேவையில்லை. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஃபிளாட் பிட்சுகளில்கூட பந்துவீச்சாளர்களால் நன்கு ஸ்விங் செய்ய இது உதவும். மேலும் பந்தை சாண்ட் பேப்பர் உள்ளிட்ட செயற்கையான பொருள்களைக் கொண்டு பந்தை சேதப்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்படும்.
அப்படி அதிக எடை உள்ள பந்தை பயன்படுத்தினால் அது பேட்ஸ்மேன்களுக்கும், பந்துவீச்சாளர்களும் இடையே கடும் சவால்களை ஏற்படுத்தும். மேலும் சமீப ஆண்டுகளாக பேட்டின் வடிவத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
80,90களில் விளையாடிய வீரர்கள் அதிக எடை உள்ள பேட்டை பயன்படுத்தினர். தற்போதைய மாடர்ன் டே கிரிக்கெட்டில் வீரர்கள் எடைக்குறைவான பேட்டையே பயன்படுத்துகின்றனர்.
ஆனால், பந்தின் வடிவம் நீண்ட ஆண்டுகளாக ஒரே மாதிரியேதான் இருந்துள்ளது. அதனால், இனி வருங்காலங்களில் பந்தின் வடிவத்தில் சில மாற்றங்கள் கொண்டுவந்தால், அது சமநிலையைக் கொண்டுவரும்" என்றார்.
இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஒலிம்பிக்கைப் பின்பற்ற வேண்டும்: சச்சின் அறிவுரை...!