இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கவுள்ளது. இதற்காக 29 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் வகாப் ரியாஸும் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக வலம் வரும் வஹாப் ரியாஸ், இங்கிலாந்து மைதானங்களில் எனது பந்துவீச்சு தேவைப்பட்டால் நான் நிச்சயமாக மீண்டும் பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு திரும்புவேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள ரியாஸ், "இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நானும் அணியில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தச் சுற்றுப்பயணம் மிகவும் அசாதாரண சூழ்நிலைகளில் மேற்கொள்ளப்படுவது என்று உங்களுக்கு நன்கு தெரியும். மேலும், தேவைப்பட்டால் டெஸ்ட் கிரிக்கெட்டில், பாகிஸ்தான் அணிக்காக விளையாடவும் நீங்கள் தற்போது தயாராக உள்ளீர்களா என விசாரிக்க பிசிபி என்னைத் தொடர்புகொண்டது. நானும் அவர்களின் வேண்டுதலுக்குச் சம்மதம் தெரிவித்துள்ளேன். ஏனென்றால் எனது முன்னுரிமை பாகிஸ்தானுக்காக விளையாடுவது மட்டும்தான்.
நான் கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக முடிவு செய்தென். இதுகுறித்து நிர்வாகத்திடம் பேசியபோது, அவர்கள் என்னை முழுமையாக ஓய்வுபெற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். மாறாக ஒரு இடைவெளியாக மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினர்.
அவர்கள் அன்று எடுத்த முடிவால்தான், இன்று என்னால் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்குத் திரும்பிவர முடிகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தைப் பற்றி அவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டபோது, நான் யோசிக்காமல் அதற்கு ஒப்புக்கொண்டேன். ஏனெனில் இது பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பாகும்" என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக வலம் வரும் வகாப் ரியாஸ், இதுவரை 147 சர்வதேசப் போட்டிகளில் களமிறங்கி, 728 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.