கிரிக்கெட் போட்டிகளில் இவர் கமெண்ட்ரி செய்கிறார் என்றால் ரசிகர்கள் டி.வி அல்லது மொபைல் ஃபோன்களை மியூட் செய்யாமல் வாலியூமை அதிகம் வைத்து கேட்பார்கள். அவர்,எந்தவித கிரிக்கெட் பின்னணியும் இல்லாமல் கமெண்டெட்டராக வந்து, கிரிக்கெட்டை பற்றி நன்கு தெரிந்த ஆளுமையாக மாறியவர் ஹர்ஷா போக்லே.
கிரிக்கெட் போட்டிகளுக்கு குரல் கொடுத்து அதை அழகு சேர்பதே கமெண்டெட்டர்கள்தான். போட்டி விறுவிறுப்பாக இருக்கும் தருணத்தில், விறுவிறுப்பாகவும், அதேசமயத்தில், மொக்கையாக செல்லும்போது ஏதேனும் சுவாரஸ்யமான தகவல்களை தந்தும், போட்டியின் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றி, அப்போட்டியின் மொமண்ட்டை ரசிக்கும்படி மாற்றுகிறார்கள்.
அப்படி கிரிக்கெட் போட்டிகளுக்கு தங்களது குரல்களால் அழகு சேர்த்தவர்கள், டோனி கோஸியர், ரிச்சி பெனாட், டோனி கிரைக், ஜோஃப்ரே பாய்காட், டேவிட் லாயிட், மார்க் டெய்லர்,மைக்கல் ஹோல்டிங், ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், மைக் ஹேஸ்மன் இவர்களது வரிசையில் ஹர்ஷா போக்லேவும் முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.
மேற்கூறியதை போலவே, எந்தவித கிரிக்கெட் பின்னணியில் இருந்தும் வராமல், தற்போது தனது குரலால் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஹர்ஷா போக்லே, ஹைதராபாத்தில் ஜூலை 19, 1961இல் பிறந்தார். கெமிக்கல் இன்ஜினியரான இவருக்கு, பின்னாளில் கிரிக்கெட் வர்ணனையாளராக மாறுவோம் என அப்போது தெரிந்திருக்காது.
ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் எம்.பி.ஏ படிப்பை முடித்த பிறகு விளம்பரத்துறையில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த பின்பு விளையாட்டு மேலாண்மை சார்ந்த நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போதுதான் அவருக்கு கிரிக்கெட் மீது அதீத ஈர்ப்பு வந்தது. இவர் தற்போது சிறந்த வர்ணனையாளராக மாறியதற்கு வெஸ்ட் இண்டீஸின் டோனி கோஸியர்தான் காரணம்.
1975இல் முதல்முறையாக டோனி கோஸியரின் கமெண்ட்ரிகளை கேட்டார் 14 வயது சிறுவனான ஹர்ஷா. அன்று தொடங்கிய கமெண்ட்ரி மீதான காதல், இவருக்கு இன்றளவும் குறையவில்லை. ஹர்ஷா போக்லேவின் முன்னோடி என்றால் டோனி கோஸியரைதான் சொல்ல முடியும்.
ஏனெனில் டோனி கிரிக்கெட் வீரராக அல்லாமல், நேரடியாக கமெண்டெட்டராக வந்தவர். வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த அவர், தலைசிறந்த கிரிக்கெட் நிபுணராக திகழ்ந்தார். 1965 முதல் 2015 வரை, அதாவது அரைநூற்றாண்டிற்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் வாய்ஸாக விளங்கினார்.
இவரது கமெண்ட்ரிகளை கேட்கத் தொடங்கிய ஹர்ஷா போக்லே தனது 19 வயதில் ஆல் இந்தியா ரேடியோவில் தனது வர்ணனையாளர் கனவிற்கு முதலில் குரல் கொடுத்தார். அந்த சமயத்தில் தொடர்ந்து ஆல் இந்தியா ரேடியோவில் பணிப்புரிந்தார். ஆனால், முன்பே தெரிவித்ததை போல விளையாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்த இவருக்கு, 1992இல் மிகப் பெரிய ஆஃபர் வந்தது. 1992இல், ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்தது.
அப்போது அந்தத் தொடரை ஓளிபரப்பு செய்ய எந்த இந்திய விளையாட்டு சேனலும் முன்வரவில்லை. அந்த சமயத்தில் ஆஸ்திரேலியா பிராட்காஸ்டிங் கார்பிரேஷன் (ஏ.பி.சி) நிறுவனம், ஹர்ஷா போக்லேவை வர்ணனையாளராக ஒப்பந்தம் செய்தது. அந்தத் தொடரில் ஹர்ஷாவின் வாய்ஸை கிரிக்கெட் ரசிகர்கள் கேட்கத் தொடங்கினர், பின்னாளில் அது இந்திய கிரிக்கெட்டின் வாய்ஸாக மாறியது.
பொதுவாக ஒவ்வொரு கமண்டெட்டர்ஸுக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். இவரது குரலின் மூலம் கிரிக்கெட் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். ஹர்ஷாவின் குரலுக்காகவே போட்டியை பார்க்கும் ரசிகர்கள் ஏராளம். இவரது குரல் இல்லாமல் போட்டியைப் பார்ப்பது ரசிகர்களுக்கு ஒருவித வெறுமையை ஏற்படுத்தும்.
ஏனெனில், ஹர்ஷா தனது குரல் மூலம் ரசிகர்களை போட்டியோடு கனெக்ட் செய்வார். பொதுவாக கமெண்ட்ரியில் மிக முக்கியமானது பாஸ் அன்ட் ப்ளே. எந்த இடத்தில் அமைதி காக்க வேண்டும் என்பதும், எந்த இடத்தில் இருந்து பேசத் தொடங்க வேண்டும் என்பதும் மிக முக்கியம். இதை வெகு சிலர் மட்டுமே சரியாக செய்தார்கள். அதில், ஹர்ஷாவும் ஒருவர்.ரிச்சி பெனாட் ஆஸ்திரேலியாவின் Voice of Cricketer என்ற பெருமையை பெற்றவர்.
ரிச்சி பெனாட்டின் கமெண்ட்ரி எளிமையாக இருக்கும். குறைந்த வார்த்தைகள் மூலம் போட்டிக்கு அழகு சேர்பார். அவரது ஸ்டைலில் இருந்து கொஞ்சம் மாறுபட்டவர் ஹர்ஷா. எளிமையாகவும், அதே சமயத்தில் போட்டியின் விறுவிறுப்பு தன்மையையும் நமக்குள் புகச் செய்வார். தொடர்ந்து 1996, 1999 உலகக் கோப்பையில் பிபிசி கமெண்டெட்டர்ஸ் லிஸ்டில் இடம்பிடித்து அசத்தினார்.
சச்சினின் நெருங்கிய நண்பரான இவர், சச்சின் விளையாடிய பல போட்டிகளில் கமெண்ட்ரி செய்ததோடு, அவரது கடைசி டெஸ்ட் போட்டியில் கமெண்ட்டரி செய்து அசத்தியுள்ளார். இதுவரை 500க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றிய ஹர்ஷா, சச்சினின் ஸ்டைர்ட் ட்ரைவ் ஷாட் குறித்து open the text book and turn to page 32 என பன்ச் டயலாக் மூலம் விவரிப்பார்.
இவர் சிறந்த கிரிக்கெட் வர்ணனையாளர் மட்டுமின்றி சிறந்த கிரிக்கெட் நிபுணராகவும் விளங்குகிறார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் ஃபைனல் போட்டி குறித்து பல்வேறு வீரர்கள் விமர்சித்தாலும், இவர் ஐசிசியின் விதிமுறையில் உள்ள சிக்கல்கள் குறித்து விளக்கியிருப்பார். இவர் சிறந்த கிரிக்கெட் நிபுணர் என்பதற்கு இதுவே சான்று.
சச்சின் எப்படி கிரிக்கெட்டின் கடவுளோ, அதேபோல் இந்திய கிரிக்கெட்டின் கமெண்ட்ரி கடவுள் ஹர்ஷா போக்லே.