இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி புனேவில் இன்று நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
இப்போட்டியின் மூலம், இந்திய அணியின் கேப்டன் கோலி தனது டெஸ்ட் கேப்டன்ஷிப்பில் புதிய மைல்கள் சாதனை படைத்துள்ளார். அதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் கேப்டனாக 50ஆவது போட்டியில் களமிறங்கியுள்ளார். இதன்மூலம், இந்திய அணியை 50 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதனால், இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்த கங்குலியை (49 போட்டிகள்) அவர் முந்திச் சென்றுள்ளார்.
இப்பட்டியலில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி (60 போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார். அவரது இந்தச் சாதனையையும் கோலி கூடிய விரைவில் ஓவர்டேக் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியை அதிக டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்திய கேப்டன்கள் விவரம்:
வீரர்களின் பெயர் | கேப்டனாக இருந்த காலம் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | டிரா | வெற்றி விழுக்காடு |
தோனி | 2008 - 2014 | 60 | 27 | 18 | 15 | 45% |
கங்குலி | 2000 - 2005 | 49 | 21 | 13 | 15 | 42.85% |
கோலி | 2014 - தற்போதுவரை | 49 | 29 | 10 | 10 | 59.18% |
அசாருதீன் | 1990 - 1999 | 47 | 14 | 14 | 19 | 29.78% |
சுனில் கவாஸ்கர் | 1976 - 1985 | 47 | 9 | 8 | 30 | 19.14% |
அதேசமயம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த இந்திய அணியின் கேப்டன்களின் வரிசையில் கோலி (29) முதலிடத்தில் உள்ளார். அதேபோல, அந்நிய மண்ணில் அதிக வெற்றிகளைப் (13) பதிவு செய்த கேப்டன் என்ற பெருமையையும் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில்தான் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தனது 50ஆவது கேப்டன்ஷிப் போட்டியில் களமிறங்கும் கோலி, அப்போட்டியில் வெற்றிபெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க:கரீபியன் மண்ணில் டெஸ்ட் மன்னரான கோலி!