உலகக்கோப்பை முடிவடைந்த பின்னர் கோலியின் கேப்டன்சி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அணியைத் தேர்வு செய்வதில் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் அணுகுமுறைதான் தோல்விக்குக் காரணம் என்று ரோஹித் ஷர்மா கருத்து தெரிவித்ததாக கூறப்பட்டது. மேலும், ரோஹித் ஷர்மா இன்ஸ்டாகிராமில் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா இருவரையும் ’அன்ஃபாலோ’ செய்ததால் சந்தேகம் மேலும் வலுத்தது. அனைவரும் ரோஹித்துக்கும் கோலிக்கும் உண்மையாகவே மோதல் உள்ளது என்றே நம்பினர்.
அதை உறுதிப்படுத்தும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செல்வதற்கு முன்பு கோலி செய்தியாளர்களைச் சந்திக்காமல் சென்றுவிட்டார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்த கோலி மற்றும் ரவி சாஸ்திரி இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கோலியிடம் ரோஹித் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதுகுறித்து அவர், “எனக்கும் ரோஹித்துக்கும் எந்த பிரச்னையுமில்லை. வீண் வதந்திகளைப் பரப்புகின்றனர். எனக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் நான் நடந்துகொள்ளும் விதத்திலேயே தெரிந்துவிடும். ஆனால், இதுவரை நான் ரோஹித்தை பாராட்டியே உள்ளேன். எங்கள் இருவருக்கும் எந்த பிரச்னையுமில்லை. இப்படி வதந்திகளைக் கிளப்பிவிட்டு யார் பயனடைகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை” என்று கூறினார்.