தற்போதைய நவீன கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோர் திகழ்கின்றனர். இவர்கள் நால்வரும் பேட்டிங்கில் ஒருவருக்கு ஒருவர் போட்டியிட்டு ரன்களை சேர்ப்பதால், இவர்களில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்வி எப்போதும் சமூக வலைதளங்களில் எழும்.
இந்நிலையில், மூன்று விதமான போட்டிகளிலும் விராட் கோலியே சிறந்த பேட்ஸ்மேன் என பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஜுனைத் கான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தானின் யூ-டியூப் சேனலிடம் பேசிய அவர், "மூன்று விதமான போட்டிகளிலும் விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.
நீங்கள் யாரிடமும் தற்போதைய உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் யார் என கேட்டால் பாபர் அசாம், ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோர் தான் கூறுவர். ஆனால், கோலி மூன்று விதமான போட்டிகளிலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் அவரே இப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பார்" எனத் தெரிவித்தார்.
டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று விதமான போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டன் கோலி மட்டுமே பேட்டிங்கில் 50 ரன்களுக்கும் மேல் சராசரி வைத்துள்ளார்.
முன்னதாக 2012இல் பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2- 1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி கோப்பை கைப்பற்றியது. இதில் மூன்று போட்டிகளிலும் கோலியின் விக்கெட்டை ஜுனைத் கான் தான் வீழ்த்தினார்.
பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 22 டெஸ்ட் போட்டிகளில் 71 விக்கெட்டுகளும், 76 ஒருநாள் போட்டிகளில் 110 விக்கெட்டுகளும், 9 டி20 போட்டியில் 9 விக்கெட் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.