தற்போதைய நவீன கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தலை சிறந்த பேட்ஸ்மேனாகத் திகழ்கின்றனர். இருப்பினும் இவர்களில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற ஒப்பீடும் விவாதமும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இருவருமே டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளனர். இந்நிலையில் இருவரது திறன் குறித்தும் ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் கூறுகையில், "டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கோலி, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரது சாதனைகள் பிரம்மிக்க வைக்கும் வகையில் உள்ளன.
கோலியைப் பொறுத்தவரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில், ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சை எதிர்கொள்வதில் தடுமாறினார். அதன் பின்னர் 2018இல் அவர் சிறப்பாக கம் பேக் தந்து தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தினார்.
மறுமுனையில் ஸ்டீவ் ஸ்மித் எந்த மண்ணிலும் தடுமாறியதில்லை. அவர் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்.
இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தால் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்தத் திறன் தான் மற்ற வீரர்களிடமிருந்து இவர்களை தனித்துக் காட்டுகிறது" எனத் தெரிவித்தார்.