விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில், குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு ராஜஸ்தான், சர்வீசஸ் ஆகிய அணிகளை வீழ்த்தி வெற்றிப் பயணத்தில் இருந்தது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு, பீஹாரை எதிர்கொண்டது.
இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பீஹார் அணி 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, கேப்டன் பாபுல் குமார் 110 ரன்கள் அடித்தார். தமிழ்நாடு அணி தரப்பில் எம். முகமது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, 218 ரன்கள் இலக்குடன் விளையாடிய தமிழ்நாடு அணியில் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், பாபா அபராஜித் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இதனால், தமிழ்நாடு அணி 46.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
பாபா அபராஜித் 52 ரன்களுடனும், விஜய் சங்கர் ஆறு பவுண்டரி, ஒரு சிக்சர் என 91 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்தப் போட்டியில் தமிழ்நாடு ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம், இந்தத் தொடரில் ஹாட்ரிக் வெற்றிகளைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.