உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் போட்டிகள் தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகின்றன. இதில், குரூப் பி பிரிவுக்கான இன்றைய லீக் போட்டியில் தமிழ்நாடு அணி, விதர்பா அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி, தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய முரளி விஜய், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற, கேப்டன் தினேஷ் கார்த்திக், அதிரடியாக விளையாடி, அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 32 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 58 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். இதனால், தமிழ்நாடு அணி நிர்ணயித்த 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைக் குவித்தது. விதர்பா அணி தரப்பில் யாஷ் தாக்கூர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, 179 ரன்கள் இலக்குடன் விளையாடிய விதர்பா அணி வீரர்கள், தமிழ்நாடு அணியின் பந்துவீச்சாளர் விஜய் சங்கர், சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோர் ஆகியோரது அசத்தலான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இறுதியில், அந்த அணி 14.5 ஓவர்களில் 55 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், தமிழ்நாடு அணி இப்போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு குரூப் பி பிரிவில் விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்து வெற்றி, ஒரு தோல்வி என 20 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. தமிழ்நாடு அணி தரப்பில் சாய் கிஷோர், விஜய் சங்கர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இவர்களைத் தவிர, நடராஜன், வாஷிங்டன் சுந்தர், எம். முகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
இதையும் படிங்க: தோனியின் டெஸ்ட் சாதனையை முறியடித்த கிங் கோலி