ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் 13ஆவது சீசனில் பங்கேற்கவுள்ள வீரர்களின் ஏலம் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றுவருகிறது. இதில் கலந்துகொண்டுள்ள ஐபிஎல் அணிகள் தங்கள் அணிக்கான உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
இதில் கொல்கத்தா அணி இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் (ரூ.5.25 கோடி), நம்பர் ஒன் டெஸ்ட் பந்துவீச்சாளரான ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் (ரூ.15.50 கோடி) ஆகிய வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்தது.
அதன்பின் இந்திய வீரரான ராகுல் திரிபாதியை ரூ.60 லட்சத்திற்கு வாங்கிய கொல்கத்தா அணி தமிழ்நாட்டு வீரரான வருண் சக்கரவர்த்தியை வாங்குவதில் மும்முரம் காட்டியது. இவருக்கு அடிப்படை விலையாக ரூ.30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் ரூ.4 கோடிக்கு கொல்கத்தா அணி வருண் சக்கரவர்த்தியை வாங்கியது.
சுழற்பந்துவீச்சாளரான வருண் சக்கரவர்த்தி, தமிழ்நாடு அணிக்காக ரஞ்சி, விஜய் ஹசாரே உள்ளிட்ட தொடர்களிலும் பங்கேற்றுவருகிறார். இவரை கடந்தாண்டு 8.4 கோடி ரூபாய்க்கு வாங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, இந்த ஏலத்திற்கு முன்பாக விடுவித்தது.
நடப்பு ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம்போன இந்திய வீரர்களில் சென்னை அணியால் ரூ.6.75 கோடிக்கு வாங்கப்பட்ட பியூஸ் சாவ்லாவுக்கு அடுத்தபடியாக வருண் சக்கரவர்த்தி உள்ளார். ஒரே ஒரு ஐபிஎல் போட்டியில் மட்டுமே பங்கேற்றுள்ள இவர் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியுள்ளார். எனினும் இவர் மீது நம்பிக்கை கொண்ட கே.கே.ஆர். நிர்வாகம் மீண்டும் அவரை கோடிகளில் புரளவைத்து வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது.
கடந்தமுறை அஸ்வின் தலைமையில் ஒரே ஒரு போட்டியில் களமிறங்கிய வருண், இந்தாண்டு தினேஷ் கார்த்திக்கின் தலைமையின் கீழ் விளையாடவுள்ளார். அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் பட்சத்தில் நிச்சயம் அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்பப்படுகிறது.
இது தவிர இந்திய வீரர் எம். சித்தார்த் (ரூ.20 லட்சம்), பிரவீன் தம்பே (ரூ.20 லட்சம்), இங்கிலாந்து வீரர் டாம் பேண்டன் (அடிப்படை விலை ரூ.1 கோடி) உள்ளிட்டோரையும் கொல்கத்தா அணி வாங்கியது.
இதையும் படிங்க: டிகே கேப்டனாக தொடர்வார் - கொல்கத்தா பயிற்சியாளர் மெக்கல்லம்