கரோனா வைரஸின் அச்சுறுத்தலினால் இம்மாதம் தொடங்க இருந்த ஐபிஎல் தொடர் தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்களும் தங்களது நேரத்தை சமூக வலைத்தளங்களில் செலவிட்டுவருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னருடன் இணைந்து இன்ஸ்டாகிராம் நேரலை நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.
அப்போது பேசிய விஜய் சங்கர், ‘நான் முதலில் அணியில் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே இருந்தேன். எனது பேட்டிங்கில் என்னால் சிறப்பாக தொடங்க முடியாததால் பிறகு பந்துவீச்சு பயிற்சியை மேற்கொண்டேன். அதிலிருந்து நான் என்னை ஒரு ஆல்ரவுண்டராக தரம் உயர்த்திகொண்டேன்.
மேலும் இவ்விளையாட்டில் என்னை வளர்த்தவர் என்றால் அது ராகுல் டிராவிட் தான். 2003ஆம் ஆண்டு அடிலேய்டில் அவர் ஆடிய ஆட்டம் என்னை மிகவும் கவர்ந்தது. அது அவருடைய மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்றாகும்’ என்று தெரிவித்தார்.
அதனையடுத்து வார்னர், விஜய் சங்கரிடம் உங்களுக்கு பிடித்த ஐபிஎல் ஆட்டம் என்றால் எதைக்கூறுவீர்கள் என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த சங்கர், ‘நான் எனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக நிறையப் போட்டிகளில் விளையாடியது இல்லை. இருப்பினும் 2017ஆம் ஆண்டு குஜராத் லையன்ஸ் அணிக்கு எதிராக நான் 63 ரன்களை எடுத்து அணிக்கு வெற்றியைப் பெற்று தந்ததுதான் என்னுடைய சிறப்பான ஆட்டம்’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'அனைத்து கிரிக்கெட் வீரர்களும் இவரின் தலைமையின் கீழ் விளையாட ஆசை தெரிவிப்பர்'!