பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக வலம்வந்தவர் உமர் அக்மல். இவர் மீது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) டி20 தொடரில் ஸ்பாட் ஃபிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) ஊழல் தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஃபசல், உமர் அக்மல் மீதான சூதாட்டம் குறித்தான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால், அவர் மூன்று ஆண்டுகளுக்கு எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கக்கூடாது எனத் தடைவிதித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்ட உமர் அக்மல், தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதாகப் பாகிஸ்தான் செய்தி வலைதளம் தெரிவித்துள்ளது.
மேலும், அக்மல் தனது வழக்கில் உதவுவதற்கு, நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் பாபர் அவானை (Babar Awan) நியமித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணிக்காக, உமர் அக்மல் இறுதியாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடியிருந்தார். பாகிஸ்தான் அணிக்காக இதுவரை உமர் அக்மல் 16 டெஸ்ட், 121 ஒருநாள், 84 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கேப்டன்சியில் இம்ரான் கான் ஸ்டைலை பின்தொடர்வேன்: பாபர் அஸாம்...!