கடந்த மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் டி20 தொடரின் 13ஆவது சீசன் கரோனா வைரஸ் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இப்பெருந்தொற்றால் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த டி20 உலகக்கோப்பை தொடர் ரத்தாகும் பட்சத்தில் ஐபிஎல் டி20 தொடர் வரும் செப்டம்பர் 25 முதல் நவம்பர் 1வரை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஐபிஎல் டி20 தொடரில் விளையாட தான் ஆர்வமாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் தெரிவித்திருந்தார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 15.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்நிலையில், ஐபிஎல் டி20 தொடரும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளும் ஒரே சமயமத்தில் நடைபெற்றால் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டுமென அந்த அணியின் முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களை கிரிக்கெட் ஆஸ்திரேலியா நன்றாக கவனித்துக்கொள்கிறது. அவர்களுக்கு நிதியளவில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் நல்ல ஊதியத்தைதான் பெற்றுவருகின்றனர். அதனால், அவர்கள் உள்ளூர் போட்டிகளுக்குதான் எப்போதும் முக்கியத்துவம் தர வேண்டும்.
இதுவே முன்னணி இல்லாத வீரர்களுக்கு பெருமளவு ஊதியம் ஐபிஎல் மூலமாக வருகிறது என்றால் அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை தான் எதுவும் சொல்ல மாட்டேன். அவர்கள் மீது எனக்கு கருணை உள்ளது.ஆனால், நல்ல ஊதியம் வாங்கும் முன்னணி வீரர்கள் ஆஸ்திரேலியாவை தான் தேர்வு செய்யவேண்டும். அது அவர்களது கடமையாகும்" என்றார்.
நடப்பு ஐபிஎல் டி20 சீசனில் டேவிட் வார்னர், பாட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல், கிறிஸ் லின், உள்ளிட்ட 16 ஆஸ்திரேலிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்ட ஐசிசி!