ராணிப்பேட்டை: நெமிலி அருகே முன்விரோத காரணமாக ஏற்பட்ட தகராற்றில் இரு இளைஞர்கள் மீது 5 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பெட்ரோல் ஊற்றி கொலை முயற்சி செய்த நபரைக் கைது செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரேம் என்பவர், தனது நண்பர்களுடன் பொங்கல் பண்டிகையான 15ஆம் தேதி திருமால்பூரில் இருந்து நெமிலிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, பனப்பாக்கத்தில் இருந்து திருமால்பூர் செல்லும் சாலையில், நெல்வாய் அருகில் நின்று கொண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்கிற தமிழரசன் (வயது 22), விஜயகணபதி (வயது 25) ஆகிய இருவரும் சேர்ந்து பிரேம்குமார் (வயது 25) மற்றும் அவரது நண்பர்களிடம் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் செல்லக்கூடாது என எச்சரிக்கை செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுத் தானாக கலைந்து சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று (ஜன.16) நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா, விஜயகணபதி மற்றும் சிலர் திருமால்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிவிட்டு நடந்து வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த திருமால்பூரைச் சேர்ந்த பிரேம்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சூர்யா மற்றும் விஜயகணபதி இருவரையும் வழிமறித்து தகராற்றில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், ஆத்திரமடைந்த அவர்கள் கேனில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை இருவர் மீதும் ஊற்றியதாகவும், அதையடுத்து பிரேன் என்பவர் தீ வைத்துக் கொளுத்தி விட்டு, தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. அப்போது, இருவரும் வலி தாங்க முடியாமல் அலறித் துடித்துள்ளனர். அலறல் சத்தம் கேட்டம் அப்பகுதியில் விரைந்து வந்து, பற்றி எரிந்த தீயை அணைத்துள்ளனர். ஆனால், அதற்கு இளைஞர்கள் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மைனர் பெண்ணை டூர் அழைத்துச் சென்ற இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன்!
அதனைத் தொடர்ந்து, தீக்காயம் அடைந்த சூர்யா, விஜயகணபதி இருவரையும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது, இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்திய நபர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, காயமடைந்தவர்களின் உறவினர்கள் திருமால்பூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பதற்றத்தைத் தவிர்க்க ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று, விசாரணை நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட அறிக்கையில், பிஎன்எஸ் (Bharatiya Nyaya Sanhita) - U/S 296(b), 115(2), 109, 351(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள நெமிலி போலீசார், குற்றம் சாட்டப்பட்ட பிரேம்குமார் கைது செய்துள்ளனர். மேலும், இருவரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.