கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலக நாடுகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தன் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தனது யூ-ட்யூப் பக்கத்தில் பொதுமக்களுக்கு வேண்டுகோள்விடுத்து காணொலி ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அந்தக் காணொலியில், "உலகம் முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இச்சூழலில் பொதுமக்கள் அனைவரும் மதங்களையும், பொருளாதார நிலைகளையும் கடந்து சிந்திக்க வேண்டியது அவசியம்.
மேலும் மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதன்மூலம் இப்பெருந்தொற்றைத் தடுக்க இயலும். இதனை உலகிலுள்ள அனைத்து ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது வேண்டுகோளாக விடுக்கிறேன்.
நீங்கள் பொருள்களைப் பதுக்கிவைத்திருந்தால், தயவுசெய்து தினசரி கூலி தொழிலாளர்களைப் பற்றி சிந்தியுங்கள். கடைகள் காலியாக உள்ளன. மூன்று மாதங்களுக்குப் பிறகு நீங்கள் வாழ்வீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
தினசரி கூலித் தொழிலாளியைப் பற்றி சிந்தியுங்கள், அவர் தனது குடும்பத்திற்கு எப்படி உணவளிப்பார்? மக்களைப் பற்றி சிந்தியுங்கள், மனிதனாக இருக்க வேண்டிய நேரம் இது; இந்து - இஸ்லாமியராக அல்ல. மக்கள் ஒருவருக்கொருவர் உதவ முன்வர வேண்டும்.
பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளவர்கள் பிழைப்பார்கள். ஆனால் ஏழைகளைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். நாம் யாரும் விலங்குகளைப் போல வாழவில்லை, நாம் அனைவரும் மனிதர்கள் தான். பிறருக்கு உதவியாக இருக்க முயற்சி செய்யுங்கள். தயவுசெய்து பொருள்களைச் சேமிப்பதை நிறுத்துங்கள். நாம் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்ளும் நேரம் இது" என்று தெரிவித்துள்ளார்.
ஷோயப் அக்தரின் இந்தக் காணொலிக்கு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள், பொதுமக்கள் எனத் தங்களது ஆதரவைத் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க:‘இது ஒரு சவாலான நேரம், நாம் ஒற்றுமையுடன் செயல்படுவோம்’ - நோவாக் ஜோகோவிச்