இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த யு19 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி வங்கதேசத்திடம் போராடி தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து, முதல் முறை யு19 உலகக் கோப்பை வென்ற தருணத்தில் எல்லை மீறிய வங்கதேச வீரர்கள் இந்திய வீரர்களை சீண்டினர். இதனால், இவ்விரு அணிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு பெரும் சர்ச்சையானது.
இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6.4 ஓவர்களில் தொடக்க வீரர் திவ்யான்ஷ் சக்சேனாவின் விக்கெட்டை இழந்து ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த இக்கட்டான நிலையில், யஷஸ்வி ஜெய்ஷ்வாலுடன் ஜோடி சேர்ந்த திலக் வர்மா நிதானமான ஆட்டத்தை கடைபிடித்து ஸ்கோரை உயர்த்தினார். இந்த ஜோடி 94 ரன்களை சேர்த்த நிலையில், திலக் வர்மா 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜெய்ஷ்வால் 88 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஒட்டுமொத்த இந்திய பேட்டிங்கும் சரிவடைந்தது.
இந்நிலையில், இப்போட்டியில் தோல்வி அடைந்தது குறித்தும், களத்தில் என்ன நடந்தது என்பது குறித்தும் இந்திய வீரர் திலக் வர்மா நமது ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
யு19 உலகக் கோப்பையில் ஒரு போட்டியிலும் தோல்வி அடையாத இந்திய அணி, எதனால் இறுதி போட்டியில் தோல்வியடைந்தது? எங்கு தவறு நடந்தது?
பதில்: இறுதிப் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாகவே மைதானத்தில் பலத்த மழை பெய்தது. இதனால், முதலில் பேட்டிங் செய்தபோது ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் எங்களால் ரன்கள் அடிக்க முடியவில்லை. போட்டியின் முடிவு குறித்து நாங்கள் மிகவும் வருத்தப்பட்டோம். வெற்றி, தோல்வி எல்லாமே போட்டியில் சகஜம்தானே.
போட்டி முடிந்த பின் இந்திய வீரர்களும் - வங்கதேச வீரர்களுக்கும் இடையே என்ன நடந்தது?
பதில்: வங்கதேச அணி வெற்றிபெற்ற பிறகு அவர்கள் சற்று உணர்ச்சிவசப்பட்டு எங்களிடம் நடந்துகொண்டதால்தான் தகராறு ஏற்பட்டது. அந்தத் தருணத்தில் 10 நிமிடங்களில் இரு வீரர்கள் யாரும் பேசிக்கொள்ளவில்லை. அணி உரிமையாளர்கள் உடனடியாக வந்து எங்களை கட்டுப்படுத்தினர்.
உங்களுக்கு பிடித்த வீரர் யார் என்ற கேள்வி கேட்டதும், அவர் சட்டேன ரெய்னா என பதிலளித்தார். இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்பதே இங்கு பலரது கனவாக உள்ளது. அப்படிப்பட்ட கனவில் பாதி கிணறை தாண்டியுள்ள திலக் வர்மா விரைவில் முழுக் கிணறையும் தாண்டுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: ‘ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்வதே எனது குறிக்கோள்’ - பி.வி. சிந்து