இந்தியா - இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்காக, சேப்பாக்த்தில் கடந்த 8 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த ஐ, ஜே, கே பார்வையாளர்கள் அரங்குகள் திறக்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புதிய அரங்குகள் திறப்பு மூலம், 15 ஆயிரம் பார்வையாளர்கள் அமர முடியும் எனக் கூறப்படுகிறது.
முதல் டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், இரண்டாம் போட்டிக்கு மத்திய அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில், ரசிகர்களுக்கு அனுமதி என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை பிப்ரவரி 8ஆம் தேதி காலை 10 மணிக்கு இணையதளத்தில் தொடங்குகிறது.
ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டுகளை www.paytm.com, www.insider.in என்ற இணையதளத்தில் சென்று மட்டுமே முன்பதிவு செய்யலாம். நேரில் டிக்கெட்கள் விற்பனை செய்யப்படவில்லை. 5 நாள் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட், நாள் ஒன்றுக்கு ரூ.100, ரூ.150, ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச டிக்கெட்டின் விலை 200 மட்டுமே என்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆன்லைனில் புக் செய்த டிக்கெட்டின் ரசீதை வரும் பிப். 11 ஆம் தேதி காலை 10 மணி முதல் விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் இருக்கும் பூத்தில் கொடுத்து போட்டிக்கான டிக்கெட்டுகளுக்காக மாற்றிக்கொள்ள வேண்டும். மைதானத்தில் போட்டியை காண வரும் ரசிகர்கள், சமூக இடைவெளியை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.