கடந்த 2000ஆம் ஆண்டில், பிப்ரவரி, மார்ச் மாதத்தின் போது ஹன்சி குரோனியே தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி, இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்தியாவில் சூதாட்டப் புகார் உச்சத்தில் இருந்த காலம் அது.
தென் ஆப்பிரிக்க அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவராகவும், அந்நாட்டு ரசிகர்களுக்கு ரோல் மாடலாகவும் இருந்த ஹன்சி குரோனியே அந்தத் தொடரின் போது சூதாட்டப் புகாரில் சிக்கினார். இந்தத் தொடரை இந்தியா அணி 3-2 என்ற கணக்கில் வென்றது. இந்தத் தொடரின் போது, ஹன்சி குரோனியேவிற்கு இடைதரகர் சஞ்சீவ் சாவ்லா அறிமுகமானார்.
தென் ஆப்பிரிக்க அணியை இந்தத் தொடரில் தோல்வி அடையச் செய்தால், குறிப்பிட்ட தொகை தரப்படும் எனக்கூறி, சஞ்சீவ் சாவ்லா சார்பில் ஹன்சி குரோனியேவிற்கு பணம் தரப்பட்டது. இதையடுத்து, டெல்லி காவல் துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில் ஹன்சி குரோனியே சூதாட்டப் புகாரில் பணம் வாங்கியது தெரியவந்ததையடுத்து, ஏப்ரல் 7, 2000இல் ஹன்சி குரோனியே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதன் விளைவாக, ஹன்சி குரோனியேவை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கியது மட்டுமில்லாமல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாழ்நாள் தடையும் விதித்திருந்தது. இதையடுத்து, நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகளை அவர் தெரிவித்தார்.
கடந்த 1996இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, அப்போதைய இந்திய அணியின் கேப்டன் முகமது அசாருதீன் தன்னை மற்றொரு சூதாட்ட இடைத்தரகரிடம் அறிமுகப்படுத்தினார் எனக் கூறினார். அந்தத் தொடரின் போது, தென் ஆப்பிரிக்க அணி ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதைத் தவிர்த்தால் பெரியளவில் தொகை தருவதாக இடைத்தரகர் தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
சூதாட்டப் புகாரில் இந்திய வீரர்களான மனோஷ் பிராகர், அஜய் ஜடேஜா, அஜய் சர்மா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, அவர்கள் மூவருக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. டெல்லி காவல்துறையினர் ஹன்சி குரோனியே மீது சூதாட்டப் புகாரில் வழக்குப்பதிவு செய்து 20 ஆண்டுகள் கடந்துள்ளன. ஆனால், 18 ஆண்டுகளுக்கு முன்பு 2002 ஜூன் 1 அன்று விமான விபத்தில் அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சூதாட்ட இடைத்தரகர் சஞ்சீவ் சாவ்லா ஜாமீன் கோரி மனு!