இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் நகரிலுள்ள ஓல்டுடிரஃபோர்டு மைதானத்தில் ஜூலை 25 (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் குவித்தது.
இதையடுத்து முதலில் பவுலிங்கை தேர்வு செய்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியாமல் போனது பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரேக் பிராத்வெய்ட் கூறுகையில், “முதல் நாள் ஆட்டம் இரு அணிகளுக்கும் சமமாகவே அமைந்தது. ஆடுகளத்தில் ஈரப்பதம் இருந்த காரணத்தினால் எங்கள் கேப்டன் ஹோல்டர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஆடுகளத்தை முழுமையாக பயன்படுத்த விரும்பினோம். ஆனால் போப் - பட்லர் சிறப்பான பார்னர்ஷிப் அமைத்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்து அவர்களின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவோம். அநேகமாக காலை நேரத்தில் புதிய பந்தை பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் நெருக்கடி கொடுப்போம்” என்றார்.
முன்னதாக 122 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான ஜோ ரூட் 17 , பார்மில் உள்ள பேட்ஸமேனான பென் ஸ்டோக்ஸ் 20 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்தனர். இந்தச் சூழ்நிலையில், போப் - பட்லர் இடையேயான 136 ரன்கள் பார்னர்ஷிப் இங்கிலாந்து மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: ஆசிய போட்டியில் கிடைத்த தங்கப்பதக்கம் - கரோனா போராளிகளுக்கு அர்ப்பணிக்கும் ஹிமா தாஸ்