குளோபல் டி20 போட்டியின் ஐந்தாவது லீக் போட்டியில் கிறிஸ் கெயில் தலைமையிலான வான்கூவர் நைட்ஸ் அணியும் ரயட் எம்ரிட் தலைமையிலான வின்னிபெக் ஹாக்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற ஹாக்ஸ் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்பின் களமிறங்கிய நைட்ஸ் அணியின் வேண்டர் டுசன், கேப்டன் கிறிஸ் கெயில் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் நைட்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கெயில் 45 ரன்களும் வேண்டர் டுசன் 39 ரன்களும் விளாசினர். ஹாக்ஸ் அணி சார்பில் கேப்டன் எம்ரிட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஹாக்ஸ் அணி கிறிஸ் லின், ஜே.பி. டுமினியின் அதிரடியால் 15.2 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடிய கிறிஸ் லின் 34 பந்துகளில் 74 ரன்களும் ஜே.பி. டுமினி 38 பந்துகளில் 77 ரன்களும் விளாசினர்.
இதனால், வின்னிபெக் ஹாக்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வான்கூவர் நைட்ஸ் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் ஜே.பி. டுமினி ஆட்டநாயகன் விருதை வென்றார்.