இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக வலம் வந்தவர் தோனி. இவரது கேப்டன்ஷிப்பின் கீழ் இந்திய அணி டி20 உலகக்கோப்பை, உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர், சாம்பியன்ஸ் டிராபி என மூன்று விதமான ஐசிசி கோப்பைகளை வென்று அசத்தியது.
அதேசமயம் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மூன்று ஐபிஎல் கோப்பை, இரண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுத் தந்துள்ளார்.
இந்நிலையில் இன்று( ஜூலை 7) தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடிய தோனிக்கு விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
அந்த வகையில், அவரது சக சிஎஸ்கே வீரரான ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹேடன் தனது பேஸ்புக் பக்கத்தில் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்தப் புகைப்படத்தில் தோனி, ஹேடனுடன் நடிகர் விஜயும் உள்ளார். அந்த பதிவில் அவர், பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோனி. நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகிறேன்.
புகழ்பெற்ற நடிகர் விஜய்யுடன் எடுத்த புகைப்படங்களில் இது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.