சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது இந்திய வேகப்பந்துவீச்சளர் முகமது சிராஜை, மைதானத்திலிருந்த ரசிகர்கள் இனரீதியாக விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து இச்செயலில் ஈடுபட்ட 6 ரசிகர்களை மைதானத்தில் பாதுகாப்பாளர்கள் வெளியேற்றினர். மேலும் இச்சம்பவத்திற்கு இந்தியாவிடம் மன்னிப்புக்கோருவதாகவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இனவெறி சர்ச்சையைக் கண்டித்து, ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள் ஷேன் வார்னே, மைக்கேல் ஹஸ்ஸி ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய ஹஸ்ஸி, 'இது பயங்கரமான நடத்தை. இந்த காலத்திலும் இதுபோல் நடக்கிறது என்பதை, என்னால் நம்ப முடியவில்லை. இச்செயலில் ஈடுபட்ட அனைவரையும் கிரிக்கெட் மைதானத்திற்கு வருவதற்கு ஆயுள் தடை விதிக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே கூறுகையில், 'சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இதுபோன்று நடந்திருப்பது முற்றிலும் அவமானகரமானது. இனி, ஒருபோதும் இது நடக்கக்கூடாது. ஏனெனில், கடந்த 12 மாதங்களாக உலகில் உள்ள அனைவரும் இதற்கென போராடி வருகிறார்கள். அதனால், இச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் இனவெறி சர்ச்சைக்கு உள்ளானதையடுத்து, இதனைக் கண்டிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் #racism ##racialabuse போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: மீண்டும் இனரீதியாக இழிவுப்படுத்தப்பட்ட சிராஜ்; ஆட்டத்தின் இடையே பரபரப்பு!