ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க்கின் தலைமையின் கீழ் ஆஸ்திரேலிய அணி 2015இல் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது. ஆஸ்திரேலிய அணிக்காக 2003 முதல் 2015ஆம் ஆண்டுவரை 115 டெஸ்ட், 245 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் முறையே 8,643 ரன்களும், 7,981 ரன்களும் குவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த வீரர்களான ரிக்கி பாண்டிங், ஹைடன், கில்கிறிஸ்ட், மெக்ராத், ஷேன் வார்னே உள்ளிட்ட வீரர்களுடன் இணைந்து விளையாடியுள்ளார். அதேபோல, சச்சின், லாரா, ஜெயசூர்யா, ஜாக் காலிஸ், டிராவிட், கோலி, டி வில்லியர்ஸ் என 1990, 2010களின் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராகவும் விளையாடியுள்ளார்.
இந்த நிலையில், தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் தனக்கு எதிராகவும் தன்னுடனும் விளையாடிய ஏழு சிறந்த பேட்ஸ்மேன்களின் பட்டியலை அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் சச்சின், லாரா, பாண்டிங், ஜாக் காலிஸ், கோலி, டி வில்லியர்ஸ், குமார் சங்ககாரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில், "மற்ற வீரர்களை விட நான் பார்த்திலேயே சச்சின் தான் டெக்னிக்கலாக சிறந்த பேட்ஸ்மேன். அவரை ஆட்டமிழக்கச் செய்வது என்பது மிகவும் கடினம். பேட்டிங்கில் அவரிடம் எந்தவொரு பலவீனமும் பார்க்க முடியாது. அவரே தவறு செய்து ஆட்டமிழந்தால் தான் உண்டு" என்றார்.
இதையும் படிங்க: வாய்ப்புகள் கிடைக்காது நாம் தான் உருவாக்க வேண்டும் - 26 ஆண்டுகளுக்கு முன் சச்சின் செய்த மேஜிக்