இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் டி20 தொடரில் பங்கேற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தத் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது பங்கேற்றுள்ளன.
சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில், அபாரமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சியளித்தது. இதைத் தொடர்ந்து விசாகபட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் அபார பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணி 387 ரன்களை குவித்து மிரட்டியது.
இதன்பின் பவுலிங்கிலும் அசத்திய இந்திய வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியை 280 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்ததால், இப்போட்டியில் இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்ததோடு தொடரிலும் 1-1 என சமநிலைப் பெற்றது. தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் கட்டாக்கில் நடக்கிறது.
இப்போட்டிக்கான பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுப்பட்டிருந்தனர். இதனிடையே இன்று பயிற்சி இல்லாத காரணத்தால் இந்திய வீரர்கள் அனைவரும் ஊரை சுற்றிப்பார்க்க கிளம்பினர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இந்திய அணியின் கேப்டன் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, அணியினருடன் ஒரு மதியவேளை. அனைவருக்கும் தேவையான ஒரு விடுமுறை என குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: பும்ராவின் பரிசோதனையை மறுத்த என்.சி.ஏ.! டிராவிட்டுடன் பேசவுள்ள கங்குலி!