ஆஸ்திரேலியாவில் உள்ளூர் போட்டியான மார்ஷ் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், பெர்த் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ்மானியா அணி, விக்டோரியா அணியை எதிர்கொண்டது. இதில், முதலில் பேட்டிங் செய்த விக்டோரியா அணி 47.5 ஓவர்களில் 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, வில் சுதர்லாந்து 53, மேக்ஸ்வெல் 34 ரன்கள் அடித்தனர்.
இதைத்தொடர்ந்து, 186 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த டாஸ்மானியா அணி 38.1 ஓவரின் போது நான்கு விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை எடுத்திருந்தது. இதனால், அந்த அணியின் வெற்றிக்கு 71 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. களத்தில் டாஸ்மானியா அணியின் கேப்டன் பென் மெக்டேர்மோட் 71 ரன்களுடன் பேட்டிங் செய்துகொண்டிருந்தார்.
இதனால், டாஸ்மானியா அணியே வெற்றிபெறும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், அடுத்து 16 பந்துகளில் ஒட்டுமொத்த ஆட்டமே தலைகீழாக மாறும் என டாஸ்மானியா அணிக்கு தெரியாமல் போனது. 20 ரன்களுடன் பேட்டிங் செய்த பியூ வெப்ஸ்டர் ட்ரிமெயின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர், டாஸ்மானியா அணியின் வெற்றிக்கு ஐந்து ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டி இருந்தது. இந்த நிலையில், டாஸ்மானியின் விக்கெட்டுகள் சீட்டுகட்டாய் சரிந்தது.
ஜேம்ஸ் ஃபால்க்னர் (1), பென் மெக்டேர்மோட் (78), குரிந்தர் சந்து (1), நதான் எலிஸ் (1), ரைலி மெரேடித் (1) ஆகியோர் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு திரும்பினர். இறுதியில் டாஸ்மானியா அணி 40.4 ஓவரில் 184 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால், அந்த அணி ஒரு ரன் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்துள்ளது. கிரிக்கெட் போட்டியில் எப்போது வேண்டுமென்றாலும் போட்டி எதிரணிக்கு சாதகமாக அமையும் என்பதற்கு இப்போட்டி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.