இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் வங்கதேச அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதைத் தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் முஷ்ஃபிகுர் ரஹிமின் அதிரடி ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்களை எடுத்தது. இதில் சிறப்பாக ஆடிய முஷ்ஃபிகுர் ரஹிம் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார்.
அதன் பின் 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி அவிஷ்கா ஃபெர்னாண்டோ, மேத்யூஸ்-இன் அதிரடியால் 44 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 242 ரன்கள் எடுத்தது. இதனால் இலங்கை அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது.
சிறப்பாக விளையாடிய ஃபெர்னாண்டோ 82 ரன்களும் மேத்யூஸ் 52 ரன்களும் விளாசினர். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த அணியின் வெற்றிக்கு உதவிய ஃபெர்னாண்டோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி மூன்றரை (44 மாதங்கள்) ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த மண்ணில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இதற்கு முன் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.