இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான சயீத் முஷ்டாக் அலி தொடர், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி முதல் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்திருந்தது. இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு மாநிலமும் தங்களது உத்தேச அணிகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் இத்தொடருக்கான அட்டவணை, போட்டி நேரம், மைதானங்களை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என்று தெரிவித்திருந்தது.
மைதானங்கள் அறிவிப்பு:
இதனையடுத்து சயீத் முஷ்டாக் அலி தொடருக்கான மைதானங்களை பிசிசிஐ இன்று அறிவித்தது. அதன்படி இத்தொடரில் எலைட் குழுக்களுக்கான போட்டிகள் பெங்களூரு, கொல்கத்தா, வதோதரா, இந்தூர், மும்பை ஆகிய நகரங்களிலும், பிளேட் குழுவுக்கான போட்டிகள் அனைத்தும் சென்னையில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
அதேசமயம் இத்தொடரின் நாக் அவுட் போட்டிகளான காலிறுதிச்சுற்று, அறையிறுதிச் சுற்று, இறுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்தில் உள்ள மொடீரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஈடன் கார்டனுக்கு வருகை தந்த அசாருதீன்
இந்நிலையில், எலைட் குழு பி-யில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு, ஜார்க்கண்ட், ஒடிசா, அஸ்ஸாம், பெங்கால், ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதன் காரணமாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட்டருமான முகமது அசாருதீன், ஈடன் கார்டன் மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், இந்த பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் அவிஷேக் டால்மியாவுடன் முகமது அசாருதீன் கலந்துரையாடினார்.
இதையும் படிங்க:மெஸ்ஸியை பாராட்டிய பீலே!